Tuesday 1 January 2019

சைவமும் அசைவமும்

சைவமும் அசைவமும்
-------------------------------------
மனித இனம் தோன்றிய காலத்தில் அவர்களது முக்கியத் தேவை உணவாக மட்டுமே இருந்தது. அப்போது அவர்கள் இயற்கையில் கிடைக்கும் காய்கறி, பழங்கள், தாவரங்களை மட்டுமின்றி, விலங்குகளை வேட்டையாடி உண்டும் தங்கள் உணவுத் தேவையை தீர்த்து வந்துள்ளனர். அப்போதிலிருந்து எல்லோரது உணவுப் பழக்கமும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. உணவுப் பழக்கத்தில் சைவம், அசைவம் என ஏற்பட்டதெல்லாம் இடையில் வந்ததுதான்.
உலகில் எல்லா நாடுகளிலும் சைவ அசைவ உணவுப் பழக்கம் இருந்து வருகிறது, மற்ற நாடுகளிலெல்லாம் எந்த உணவுப் பழக்கமும் உயர்வானதும் இல்லை, தாழ்வானதும் இல்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் சைவம் உண்பது உயர்வானதென்றும், அசைவம் என்பது தாழ்வானதென்றும் ஒரு கருத்து காலம் காலமாக பரப்பப்பட்டு வருகிறது. இது சைவ உணவு சாப்பிடுகிற ஒரு சிறு கூட்டம், அசைவம் சாப்பிடுகிற பெரும்பான்மை மக்களைத் தங்கள் உணவுப் பழக்கத்திற்கு மாற்ற முயலுகின்ற ஒரு தந்திரம். இந்த தந்திரத்தை கடைபிடிக்கின்ற அக்கூட்டம், ஒரு காலத்தில் அசைவ உணவுகளை ஒன்று விடாமல் தின்று கொழித்த கூட்டம்தான்.
அசைவ உணவு உண்பது, பாவகரமானது உயிர்க்கொலை செய்வது என்றதொரு கருத்தைப் பரப்பி உளவியல் ரீதியாக குற்ற உணர்வுக்கு உள்ளாக்க முயற்சி செய்கின்றனர். விலங்குகளுக்கு மட்டுமல்ல தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை அறிவியல் ஆணித்தரமாக நிரூபித்த பின்பும் அசைவம் உண்பது உயிர்க் கொலை என அதையே சொல்லிக் கொண்டிருப்பது கடைந்தெடுத்த முட்டாள்த்தனம் மட்டுமல்ல கேடுகெட்ட அயோக்கியத்தனமும் கூட.
சைவ உணவு உண்பவர்கள் எல்லாம் எந்த உயிருக்கும் தீங்கு எண்ணாத அன்புள்ளம் கொண்டவர்கள், அறிவு மிக்கவர்கள், ஆரோக்கியமானவர்கள் என்றதொரு பொய்யான கருத்தைப் பரப்பி அசைவ உணவு உண்பவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்க எண்ணுகின்றனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை. காந்தியைக் கொன்ற கோட்சேவும், பல கொலைகள் புரிந்திட்ட ஹிட்லரும் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள்தான். அவ்வளவு ஏன் மதம் பிடித்ததால் மனிதர்களைக் கொல்லும் சில மனிதர்களும், யானைகளும் கூட உண்பது சைவ உணவுகள் தான். நாம் அறிந்த ஆகச்சிறந்த அறிவியல் அறிஞர்களில், மேதைகளில் பெரும்பாலானோர் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள்தான். சைவ உணவுக்கும் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லுவதும் பொய்யே.
உணவுப் பழக்கத்தில் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் ஒரு வகை தீண்டாமையே. பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு எனப் பிரித்த மனு அதர்மக் கூட்டம், உணவுப் பழக்கத்தை வைத்தும் மக்களைப் பிரிப்பது உலக மகா திருட்டுத்தனம்.
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...