Tuesday 1 January 2019

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்
-------------------------------------------------------
அண்ணல் அம்பேத்கர் நமக்கு சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்’ என்பதுதான் அது.
டாக்டர் அம்பேத்கர் வெறுமனே சட்ட மேதையோ, தலித் தலைவரோ மட்டும் அல்ல. அரசியல், இலக்கியம், தத்துவம், இதிகாசம், வரலாறு, மதம், சட்டம், பொருளாதாரம் என மனித அறிவு சாதித்த துறைகளில் பெரும்பாலானவை குறித்த விரிவான வாசிப்பும் அறிதலும் கொண்டவர். அவருடைய டாக்டர் பட்ட ஆய்வு ரூபாய் குறித்தது. ரிசர்வ் வங்கியை உருவாக்கியதில் முக்கியமான பங்கு அம்பேத்கருடையது.
அண்ணல் அம்பேத்கர் வெறுமனே கற்றறிந்த அறிவுஜீவியாக மட்டும் இருந்திருந்தால், கோடிக்கணக்கான மக்களால் நினைத்துப் பார்க்கப்படும் மாமனிதராக இருந்திருக்க மாட்டார். அவர் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்காகவே அதிகம் படித்தார். தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார்.
இந்தியாவின் வரலாறு எப்படி பெளத்தத்துக்கும் பார்ப்பனியத்துக்குமான போராட்டமாக இருந்தது, சாதி என்ற காரணி எப்படி இந்திய வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் தீர்மானித்தது என்று விரிவாக ஆராய்ந்தவர் அண்ணல் அம்பேத்கர்.
கல்வி, அரசியல் அதிகாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் காலங்காலமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பவர்களுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்க வேண்டும் என்றார். அதனாலேயே இட ஒதுக்கீட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமையையும் முன்வைத்தார்.
அரசியல் கல்வியை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். “ஓர் அடிமைக்கு அவனை முதலில் அடிமை என்பதை உணர்த்து, அவன் தானாகவே கிளர்ந்தெழுந்து போராடுவான்” என்றார். இந்தியச் சாதியமைப்பின் மிகப்பெரிய பலமே அது கருத்தியல் வன்முறையைக் கொண்டிருப்பதுதான். நேரடியான வன்முறையைக் கொண்டு சாதி நிறுவப்படவில்லை. “தான் இழிவானவன், அடிமை” என்பதை அவர்களே ஒப்புக்கொள்ள வைப்பதில்தான் சாதியின் தந்திரம் அடங்கியிருக்கிறது”.என்றார் அம்பேத்கர்.
தாழ்த்தப்பட்டவர்களின் நிலையும் பெண்களின் நிலையும் ஒன்றுதான். இதை உணர்ந்துகொண்ட அண்ணல் அம்பேத்கர் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், விதவைத் திருமண மறுப்பு, குழந்தைத் திருமணம் ஆகிய பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் சாதி, தீண்டாமை ஆகியவற்றுக்கு உள்ள உறவு குறித்தும் விரிவாக ஆராய்ந்து எழுதினார்.
ஒவ்வொரு சாதிக்காரனும் தன்னை மேலே இருந்து அழுத்துகிறவன் மீது கோபப்படுவதில்லை. ஏனெனில், அவன் அடிமைப்படுத்துவதற்குக் கீழே ஒரு சாதி இருக்கிறது. இந்த உளவியல் திருப்தி, சாதியமைப்பை வலுவாகத் தக்கவைத்துக்கொள்வதைக் கண்டுபிடித்துச் சொன்னார். ''இந்து மதம் என்பது ஒவ்வொரு சாதிக்காரனும் இன்னொரு சாதிக்காரனிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்பது போன்ற விதிமுறைகளின் தொகுப்பாகத்தான் இருக்கிறது” என்றார்.
இந்து என்ற உணர்வு எவரிடமும் இல்லை. ஒவ்வொரு இந்துவிடமும் இருப்பது சாதி உணர்வுதான். சமபந்தி விருந்துகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்காது. மாறாக இந்து சமயத்தின் அடிப்படையாக உள்ள பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற பிறப்பின் அடிப்படையிலான நால் வர்ணக் கோட்பாட்டை ஒழிப்பதுதான் சரியான வழி என்று வாதிட்டார் அண்ணல் அம்பேத்கர்.
இந்துக்கள் தங்கள் மதத்தை காப்பாற்ற விரும்பினால் அவர்களுக்கு உள்ள ஒரே வழி சாதியை ஒழிப்பதுதான் எனவும் குறிப்பிட்டார். ‘நான் இந்துவாகப் பிறந்தேன். அதைத் தடுக்கும் சக்தி இல்லை. ஆனால், நான் இந்துவாக சாக மாட்டேன்’ என 1935-லேயே அறிவித்தார் அம்பேத்கர்.
அம்பேத்கர், இந்து மதத்தில் சாதிப் பாகுபாட்டை நீக்குவது முடியாத காரியம் என்ற முடிவுக்கு வந்துதான் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு புத்த மதத்தில் இணைந்தார்.
இந்துத்துவவாதிகள் அண்ணல் அம்பேத்கர் மீது தற்போது புதிதாக பாசம் காட்டுகின்றனர். இந்து மதமே வேண்டாம் என்று அதை உதறித் தள்ளிய அம்பேத்கரை சொந்தமாக்கும் இந்து மதவாதிகள் சொல்லும் காரணம், புத்தமதமும் இந்தியாவில் பிறந்தது என்பதுதான். புத்த மதத்தைக் கபளீகரம் செய்ததுபோல் அம்பேத்கரையும் கபளீகரம் செய்யும் முயற்சி வெற்றி பெறாது. அம்பேத்கரின் கருத்துகளை மேலும் மேலும் பரப்புவதன் மூலமே இந்துத்துவ சக்திகளின் மோசடியை முறியடிக்க முடியும்.
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...