Tuesday 1 January 2019

நவம்பர் 9, உலக ஊழல் எதிர்ப்பு நாள்



நவம்பர் 9, உலக ஊழல் எதிர்ப்பு நாள்
----------------------------------------------------------
ஊழல் என்றால் அரசியல்வாதிகள் என்பதிலிருந்து தொடங்கி பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் வரை வந்து இப்போது எல்லோருக்கும் பொதுமை என்றாகி விட்டது. பணம் படைத்தவர்கள் மட்டுமே வாழ்வாங்கு வாழ முடியும் என்றதொரு காலச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். ஊழல் வலியவர்களுக்கு பயனையும் வறியவர்களுக்கு பாதிப்பையும் தரக்கூடியது. ஒருவருக்கு நன்மை செய்து ஊருக்கே தீமை விளைவிப்பது ஊழலின் குணம்.
சட்டத்தின்படியோ நியாயத்தின்படியோ தமக்கு உரிமை இல்லாத ஒன்றை முறையற்ற வகையில் பெறுகிற வழிமுறைகள் அனைத்துமே ஊழல்தான். கையூட்டு கொடுப்பதும் பெறுவதும் மட்டுமே ஊழல் என்று நினைக்கிறோம், சட்டத்தின்படி அல்லாது தனிப்பட்ட முறையில் முன்னுரிமை தருவது, சட்டத்தின் குறைகளை சாதகமாகப் பயன்படுத்துவது, பயன்படுத்தத் துணை போவது இவை எல்லாமே ஊழலின் பல்வேறு வடிவங்கள்தான். ஊழல் நடவடிக்கைகளில் தருகிறவர் பெறுகிறவர் இருவருமே குற்றவாளிகள்தான்.
உலக அளவில் நடக்கின்ற ஊழல்களைப் பற்றி எல்லாம் வாய்கிழிய பேசியும்எழுதியும் வரும் நாம் நம்மைப்போன்ற சக மனிதர்களின் ஊழல்களை கண்டும் காணாமல் கடந்துவிடுவது எதனால், உண்ணுவது உறங்குவதைப்போல் ஊழலும் சாதாரண நிகழ்வுதான் என எண்ணத் தொடங்கிவிட்டோமா, நம்மைப்போன்ற ஒருவர்தானே செய்திருக்கிறார் என்ற பாசமா, வாய்ப்புக் கிடைத்தால் நாமும் யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்யலாம் என்கிற கேடுகெட்ட மனநிலையா. இனி வரும் காலங்களில் தனி மனித ஊழல்வாதிகள் பெருகி வருவர், தனி மனித ஊழல்வாதிகள் நிறைந்த சமூகத்தை ஆள்வதற்கு ஊழல் அரசர்களே வருவார்கள் உத்தமர்கள் வரப்போவதில்லை.
ஊழலின் ஊற்றுக்கண் குடும்பத்தில் தான் இருக்கிறது. பெரியவர்கள் சிறியவர்களிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் ‘நல்லாப் படிக்கணும், கை நிறைய சம்பாதிக்கணும்’ என்பது.நல்லாப் படிக்கணும் என்பது அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற கருத்தில் சொல்லப்படுகிறதே தவிர நல்லதைப் படிக்க வேண்டும் என்ற கருத்தில் சொல்லப்படுவது இல்லை அதாவது நல்லொழுக்கம் நன்னடத்தை மனிதநேயம் என்ற கருத்தில் சொல்லப்படுவது இல்லை. கை நிறைய சம்பாதிக்கணும் என்பது அதிகமாக பொருள் ஈட்டவேண்டும் என்ற பொருளில் சொல்லப்படுகிறதே தவிர நல்வழியில் ஈட்ட வேண்டும் என்ற பொருளில் இல்லை.
இங்கு குழந்தைகளுக்கு அறம் சொல்லித் தரப்படுவது இல்லை மாறாக பொருள் மட்டுமே சொல்லித் தரப்படுகிறது. அறத்தை மீறிய பொருள் எப்போதும் ஊழல் நிறைந்ததாகவே இருக்கும்.
குழந்தைகளுக்கு நாம் அறத்தை மட்டும் கற்றுத்தருவோம், பொருள் செய்வது பற்றி அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அறத்தை மீறிய பொருள் அழிவை நோக்கியே இட்டுச்செல்லும்.
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...