Tuesday 1 January 2019

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களை நினைவில் கொள்வோம்.
-----------------------------------------------------------------------------------
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமிருந்தும் 40 ஆண்டுகளாக வழங்கப்படாத சமூகநீதியை வழங்கி, அதற்காக தமது பிரதமர் பதவியை இழந்தவர். பதவிக்காய் மக்களின் உரிமைகளை ஆதிக்க ஜாதியினரிடம் அடகு வைக்காமல், சமூகநீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை தூக்கி எறியலாம் என்று அறிவித்த தியாகச் செம்மல்! அதிசய மனிதர்!
அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 340-ன் படி அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.பி.மண்டல் தலைமையில் 1980-ல் அரசுக்கு அறிக்கையை அளித்தது. ஆனால், பத்தாண்டுகள், அந்த அறிக்கை பற்றி எந்த நடவடிக்கையும் அன்றைய அரசு எடுக்கவில்லை.
1990-ல் அமைந்த தேசிய முன்னணி அரசு, தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, மண்டல் குழு அறிக்கையின் ஒரு பரிந்துரையை - பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு - நிறைவேற்றும் ஆணையை 7.8.1990-ல் அன்றைய பிரதமர் வி.பி. சிங் அறிவித்தார். இன்றைக்கு மண்டல் கமிசன் பரிந்துரைப்படி 27 விழுக்காடு பிற்படுத்தப் பட்டவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு 23 விழுக்காடு, குறைந்த பட்சம் 50 விழுக்காடு என்று ஆக்கிய காரணத்தால்தான் இன்றைக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் மத்திய அரசுப் பணிகளில் இடம் பிடித்துள்ளனர்
அன்று வி.பி. சிங் அறிவித்த ஆணையை எதிர்த்து, ஆதிக்க சக்திகள் வட நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தியது. அதைவிட வி.பி.சிங் அரசிற்கு ஆதரவு அளித்து வந்த பாஜக, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கூறி, அத்வானி தலைமையில் 25.9.1990 அன்று ரத யாத்திரையை துவங்கியது.
மண்டலை எதிர்த்து, கமண்டலம் துவக்கப்பட்டது. சமூக நீதியின் காரணமாக சம்பூகன்கள் உருவாகக் கூடாது என்ற நோக்கில், 'ராமராஜ்யம் அமைப்போம் ராமர் கோவில் கட்டுவோம்' என்ற கோஷத்தோடும், யாத்திரை கிளம்பியது. அந்த ரத யாத்திரை 30.10.1990-ல் அன்றைய முதல்வர் லாலூ பிரசாத் அரசினாலே பீகாரிலே தடுக்கப்பட்டதால், வி.பி.சிங் அரசுக்கான ஆதரவை பாஜக உடனே விலக்கிக் கொண்டது. 1990ஆம் ஆண்டு நவம்பர் 7ந் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரினார் வி.பி.சிங்.
அவரது அரசுக்கு ஆதரவாக 142 வாக்குகள் மட்டுமே பதிவாயின. எதிராக (பா.ஜ.க+காங்கிரஸ் உள்பட) 346 வாக்குகள் பதிவாயின. சமூக நீதியை நடைமுறைப்படுத்தவும், மதச்சார்பின்மையைக் காக்கவும் முயன்றவரின் தலைமையிலான தேசிய முன்னணி அரசு 11 மாதங்களிலேயே கவிழ்ந்தது. பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்டோருக்கு சமூக நீதி வழங்கிய அரசை, மதவெறி மாய்த்தது. சமூக நீதிக்கெதிராக மதத்தை முன்வைத்து ஆட்சியை கவிழ்த்தனர்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரி வி.பி.சிங் ஆற்றிய உரையில் சமூக நீதியின் அவசியத்தை அவர் அழுத்தமாக வலியுறுத்தினார். அப்படிப் பேசும்போதெல்லாம் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோரது பெயர்களை உச்சரித்தார். “என் கால்கள் உடைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நான் அடையவேண்டிய லட்சியத்தை அடைந்துவிட்டேன். மரியாதையோடு ஆட்சியை விட்டு நாங்கள் வெளியேறுகிறோம். அதற்காகப் பெருமைப்படுகிறோம்.
அரசியல் நாள்காட்டிகளில் கடைசித் தேதி என்று எதுவும் கிடையாது” என உறுதியாகத் தெரிவித்துவிட்டு, தோல்வியைத் துணிச்சலாக எதிர்கொண்டார். ஒரு வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன் வருவதுபோல, சமூக நீதிக்காகவும் மதச்சார்பின்மைக்காகவும் பிரதர் பதவியைத் துறந்துவிட்டு நாடாளுமன்றத்திலிருந்து கம்பீரமாக வெளியே வந்தார் வி.பி.சிங்.
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...