Saturday 2 June 2018

மாபெரும் கொலைகாரர்களே

மாபெரும் கொலைகாரர்களே,
எங்கள் வாசலுக்கு வந்தீர்கள், காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்டு எங்கள் வாக்குகளை பிச்சையாகக் கேட்டீர்கள், வாக்குறுதி தந்தீர்கள் தேனாறும் பாலாறும் ஓடுமென்றீர்கள், குடிசைகளெல்லாம் கோபுரமாகுமென்றீர்கள், வாழ்க்கைத்தரம் உயருமென்றீர்கள், உங்கள் பொய் வாக்குறுதிகளை நாங்கள் நம்பவில்லை. நல் உணவு உடை இருப்பிடத்தை நாங்களே பெற்றுக்கொள்வதற்கு வழி அமைத்து தருவீர்கள் என்று நம்பினோம், வாக்களித்தோம். ஆட்சியில் அமர்ந்தீர்கள் உங்கள் வாழ்க்கைத்தரம் மென்மேலும் உயர்ந்தது ஆனால் எங்கள் வாழ்கைத்தரம் அப்படியேதான் இருக்கிறது.
எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்தீர்கள் விளைநிலங்களை பிடுங்கி பெருநிறுவன முதலாளிகளுக்கு தாரை வார்த்தீர்கள். எங்கள் வாழ்க்கை போராட்டங்களுக்கு நடுவே தினந்தோறும் உங்களோடு போராடுவதையே எங்கள் வாழ்க்கையாக மாற்றினீர்கள். எங்கள் போராட்டத்தை அலட்சியம் செய்தீர்கள் கேலி செய்தீர்கள். போராட்டம் தீவிரமானால் உங்கள் அடக்குமுறையால் எங்களை ஒடுக்கினீர்கள்.
நாங்கள் வாழ்வதற்கே தகுதியற்றவர்களா இந்த மண்ணில், உயிர் வாழ்வதற்கே நாங்கள் போராட வேண்டுமா, சுவாசிக்கும் காற்றில் நச்சை கலக்கிறது அது எங்கள் உயிரை வாங்குகிறது உடனே ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள் என்றோம் தொடர்ந்து போராடினோம், பெருநிறுவன முதலாளிகளிடமிருந்து பெற்ற பிச்சைக்காக எங்கள் பக்கம் உங்கள் துப்பாக்கிகளை திருப்பி குண்டுகளை எம் உடலில் விதைத்துள்ளீர்கள், அறிந்துகொள்ளுங்கள் அதிலிருந்து புரட்சிதான் முளைக்கும். நீங்கள் பல ஆயிரம் போராளிகளை உருவாக்கி இருக்கிறீர்கள்.
துப்பாக்கிச்சூடு தவிர்க்க இயலாததென திமிராய்ப் பேசுகிறீர்கள், நீங்கள் கொன்று குவித்த உயிர்களுக்கு விலைபேசி இருக்கிறீர்கள் இப்போது.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள் கொலையாளிகளே, கல்லறைகளின் மீது கட்டமைக்கப்பட்ட மாபெரும் பேரரசுகள் எல்லாம் மண்ணோடு மண்ணாக மக்கிப் போனதுதான் வரலாறு இதற்கு உங்கள் அரசு மட்டுமென்ன விதிவிலக்கா, நாங்கள் சிந்திய குருதிகள் உங்கள் கரங்களில் கறைகளாகவே இருக்கும் அதற்கு நீங்கள் பதில் சொல்லியே தீரவேண்டும், சொந்த மக்களையே கொன்று குவித்தவர்கள் ஆட்சியை இழந்து அழிந்துதான் போயிருக்கிறார்கள், உங்கள் ஆட்சியும் அழிந்து மண்ணோடு மண்ணாகும் வெகு விரைவில். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எங்கள் குருதி குடித்த ஆட்சியாளர்களின் நிலைதான் வந்து சேரும் உங்களுக்கும் உங்கள் ஆட்சிக்கும்.
க.ம.மணிவண்ணன்
23/05/18

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...