Monday 18 June 2018

வலதுசாரி பாசிசத்தின் குரல்தான் ரஜினியின் குரல்

போராட்டங்களின் மீதும் போராட்டக்காரர்களின் மீதுமான ரஜினியின் கோபத்தை முதலமைச்சராக ஆசைப்படும் ஒரு நடிகரின் கோபமாக நாம் புரிந்து கொள்வது நமது புரிதலின்மையையே காட்டும். ரஜினியின் கோபத்தை வலதுசாரி பாசிசவாதியின் கோபமாகப் புரிந்து கொள்வதே சரியான புரிதல் ஆகும்.
எல்லா நாடுகளுமே வலதுசாரிகள் ஆகிய அரசு, மதகுருமார்கள், நிலப்பிரபுக்கள், பெருமுதலாளிகள், பணக்கரார்கள் மற்றும் இவர்களை காப்பாற்றும் ராணுவம் காவல்துறை என ஒரு பக்கமும் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள், தொழிலாளிகள் எனும் இடதுசாரிகள் ஒரு பக்கமும் என கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
வலதுசாரிகளால் சுரண்டப்படும் விளிம்புநிலை மக்கள் அமைதியாக எந்த போராட்டமும் செய்யாமல் இருக்கும் வரைதான் இந்த கட்டமைப்பு சிதையாமல் இருக்கும், வலதுசாரிகளும் தங்கள் சுகபோக வாழ்வைத் தொடர முடியும். போராட்டங்கள் நடைபெற்றால் அது அரசு முதற்கொண்டு பணக்காரர்கள் வரையிலான அனைத்து வலதுசாரிகளையும் பாதிக்கும். அதனால் தான் வலதுசாரி பாசிசவாதிகள் போராட்டங்களின் மீதும் போராட்டக்காரர்களின் மீதும் வெறுப்பும் கோபமும் கொள்கிறார்கள்.
வலதுசாரிகளுக்குள் சிறு சிறு பிணக்குகள் இருக்கலாம் ஆனால் போராட்டத்தையும் போராட்டக்காரர்களையும் ஒடுக்க வேண்டும் என்பதில் ஒரே புள்ளியில் இணைவார்கள். தமிழக அரசை இதுவரை விமர்சித்து வந்த ரஜினி இப்போது அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதையும் ஜெயலலிதாவின் அரசு அடக்குமுறையை பாராட்டுவதையும், ரஜினியின் கருத்துக்கு ஆளும் தமிழக அரசு பாராட்டு தெரிவிப்பதையும் உற்றுநோக்கினால் வலதுசாரி பாசிசத்தின் உண்மையான குணத்தை புரிந்து கொள்ளலாம்.
உலகத்தில் நடைபெற்ற புரட்சிகள் எல்லாம் ஒரே நாளில் நடைபெற்றதல்ல சிறுசிறு போராட்டங்களாக தொடங்கி புரட்சியாக வடிவம் பெற்றவை. அனைத்து புரட்சிகளுமே அரசர் முதற்கொண்டு பணக்காரர்கள் வரையிலான வலதுசாரி பாசிசவாதிகளுக்கு எதிராக எழுந்தவையே. அதனால்தான் வலதுசாரி சிந்தாந்தவாதிகள் சிறுசிறு போராட்டங்களாக ஆரம்பிக்கும்போதே அதை ஒடுக்கிவிட வேண்டும் என்பதில் பெரு முனைப்பாக உள்ளனர். வலதுசாரிகளின் ஒரு அங்கமாக இருக்கும் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ரஜினி பெருமுதலாளிகளையும் அரசு அடக்குமுறைகளையும் அதை செயற்படுத்தும் காவல்துறையையும் கொண்டாடுவதில் வியப்பொன்றுமில்லை.
ரஜினியின் பேட்டியை நன்கு கவனித்தவர்களுக்கு ஒன்று நன்றாக விளங்கும், அவரது உடல்மொழியும்,பேச்சுத்தொனியும்,திமிரும் கோபமும் பாசிசவாதிகளுக்கே உரித்தானது. அமைதியாக இருந்தவரை தியானம் அறிந்த மிகப்பெரிய ஞானி என்று போற்றப்பட்ட அவரது முகம் பொதுவெளியில் அதிகமாகப் பேசத்தொடங்கியதும் கிழிந்து தொங்கி பாசிச முகம் வெளியே தெரிந்துவிட்டது.
இது ஏதோவொரு ரஜினியின் குரல் மட்டுமல்ல இதே போன்ற ரஜினிக்கள் உங்கள் வீட்டிற்கு அருகிலும் தெருவிலும் ஊரிலும் இருப்பார்கள், அவர்கள் மேல்தட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் வலதுசாரி சிந்தாந்தவாதிகள். இவர்களுக்கும் போராட்டங்களையும் போராட்டக்காரர்களையும் பிடிக்காது. ரஜினியின் குரலை ஒத்ததாகவே இருக்கும் இவர்களின் குரலும்.
ரஜினி பொதுவெளியில் பேசிவிட்டார் ஆனால் இவர்கள் அதே கருத்தை வீட்டிற்குள் பேசிக்கொண்டிருப்பார்கள், எங்கேயாவது போராட்டம் நடந்தால் இவர்களுக்கு வேறு வேலையே இல்லை என்று முணுமுணுப்பார்கள். இவர்களும் ரஜினியைப் போன்றே வலதுசாரி சிந்தந்தவாதிகள் தான்.
க.ம.மணிவண்ணன்
02/06/2018

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...